செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி அகத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பயிற்சி முடித்த 86 பயிற்சியாளர்களுக்கு, பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி அலுவலகம் அமைப்பதற்காக 10.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
பிறகு பயிற்சி முடிந்த காவலர்களிடம் பாவந்து மரியாதையைப் பெற்றுக்கொண்டார். மேலும், பயிற்சியின்போது சிறப்பாகச் செயல்பட்ட எட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களும், மிகச் சிறப்பாகப் பயிற்சியில் கைத்தேர்ந்தவருக்கு வாளும் வழங்கப்பட்டன.
பின்னர் பேசிய ஸ்டாலின், "எத்தனையோ துறைகளில் காவல் துறையும் ஒரு துறை என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நம் அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அமைதியை மட்டும்தான். அதை நிறைவேற்றித் தருவது காவல் துறை மட்டுமே. குற்றங்களுக்குத் தண்டனை பெற்றுத்தரும் துறையாக இல்லாமல் குற்றங்களைத் தடுப்பதற்கான துறையாக காவல் துறை இருக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால் மட்டுமே நாட்டின் வளம் பெருகும், தொழில் பெருகும், கல்வித்தகுதி உயரும். அனைத்து வளர்ச்சிக்கும் செழிப்பாக இருப்பதற்குச் சட்டம் ஒழுங்கு மிக முக்கியமானது. 1971ஆம் ஆண்டு முதல்முறையாக காவல் துறையில் கணினித் துறையைத் தொடங்கிவைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
அதுமட்டுமின்றி பெண் காவலர்களை முதல் முறையாகப் பணியில் அமர்த்தியதும், துணை ஆணையராகப் பெண்ணை நியமனம்செய்ததும் கருணாநிதிதான். இந்தப் பெருமை திமுக அரசுக்கு மட்டுமே சேரும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நடைமுறைக்கு வருகிறது ஓபிசி 27% இட ஒதுக்கீடு; பாஜக ஆட்சியில் உண்மையான சமூகநீதி'