சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.1) தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டிவருகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மு.க. ஸ்டாலின் அண்ணா, பெரியார், கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, எம்பிக்கள் டிஆர் பாலு, ஆ.ராசா இருந்தனர். இதையடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு தொண்டர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னை வந்துள்ளனர்.
முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, தலைமை கழகத்தின் சார்பில், மார்ச் 1ஆம் தேதி மாலை 5.00 மணி அளவில் ஒய்எம்சிஏ மைதானத்தில் விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், 70ஆவது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள்.. சென்னையில் கூடும் தலைவர்கள்..