சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை.6) தலைமைச் செயலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கிட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அந்த உதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீடு
- உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு
- சுமார் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்துவதை மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம், உறுதிசெய்ய வேண்டும்
- அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை, வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்வித தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும்
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைத்தல், அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட உலக வங்கி நிதி உதவியின் கீழ் சுமார் ரூபாய் ஆயிரத்து 702 கோடி மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தைத் தமிழ்நாட்டில் விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதையும், அரசு கட்டடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முன்னதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியன குறித்த விவரங்களைத் துறையின் செயலாளர் ஆர். லால்வேனா, மற்றும் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், ஆகியோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவு