சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எஸ்.பி.க்கள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு நேற்று (அக்.04) நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “கரோனா பெருந்தொற்று, கனமழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மீண்டு, அதற்கு பிறகு நமக்கு கிடைத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சிறப்பான திட்டமிடல், செயலாக்கம் மற்றும் நிதி மேலாண்மையின் மூலமாக இன்றைக்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை சரியான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.
மேலும், எந்தவொரு திட்டத்தையும் முதலமைச்சரின் திட்டமாக, ஒரு கட்சி சார்ந்த திட்டமாக கருதாமல், அலுவலர்கள் அனைவரும் தங்கள் கனவுத் திட்டமாக, மக்களுக்கான திட்டமாக நினைத்து அதை முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றினால்தான், அது மக்களுக்கு நன்மை பயக்கும்.
மாவட்ட ஆட்சியர்களின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது, அவர் எவ்வாறு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, நிர்வாகத்தை கொண்டு செல்கிறார் என்பதில்தான் உள்ளது. நீங்கள்தான் மாவட்ட நிர்வாகத்தின் தலைவர். உங்களால்தான் மாவட்டத்தில் இயங்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க இயலும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். “முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து 400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோன்று, அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலுவோருக்கு ரூபாய் ஆயிரத்து 100 என்பது, இனி ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,71,844 மாணவ, மாணவியர் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு 68 கோடியே 77 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே, இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டாவதாக, காவல் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின்படி, கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 50 ஆயிரமாக வழங்கப்படும்.
மூன்றாவதாக, விசாரணைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அதனைக் களைய, உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று, வீடியோ கான்பரன்சிங் முறையினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
நான்காவதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து, சீரமைக்க சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.
ஐந்தாவதாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுக் குழு அமைக்கப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: "விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உறவினர்கள் கோரிக்கை!