தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 'யாதும் ஊரே' என்ற திட்டத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளார். வரும் 28-ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கும் முதலமைச்சர் செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். அவருடன் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, சி. விஜயபாஸ்கர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தின்போது அவரது பொறுப்புகள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட யாரேனும் ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் என்று பேச்சு அடிபட்டுவந்தது.
ஆனால் தற்போது முதலமைச்சரின் பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான முடிவுகளை முதலமைச்சர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்தே கையெழுத்திட்டு ஃபேக்ஸ் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த பயணத்தின் மூலம் எம்ஜிஆருக்கு பிறகு தொழில் முதலீட்டுக்காக வெளிநாடு செல்லும் அதிமுகவை சேர்ந்த முதலமைச்சர் என்னும் பெருமையை எடப்பாடி பெற உள்ளார். மேலும் முதலீட்டுக்காக வெளிநாட்டிற்கு எம்ஜிஆர் சென்றபோது அவரது பொறுப்புகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 1968-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை அமெரிக்கா சென்றிருந்த போது அவர் வகித்து வந்த இலாக்காக்கள் 4 மூத்த அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1970-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஐரோப்பா சென்றிருந்தபோது அவரது இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்ல உள்ள நிலையில், அவர் வகித்து வரும் இலாக்காக்களை யாரிடமும் ஒப்படைக்கவில்லை. முதலமைச்சருக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் பதவியில் உள்ளபோது பொறுப்புகளை ஓபிஎஸ்ஸிடம் கொடுத்துவிட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈபிஎஸ்ஸின் இந்த செயல் பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஓ. பன்னீர்செல்வம், ஏற்கனவே 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். துணை முதலமைச்சர் என்ற பதவி அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை என்றாலும்கூட மூத்த தலைவர், நிதியமைச்சர் என்ற முறையிலாவது பன்னீர்செல்வத்துக்கு பொறுப்பு முதலமைச்சர் பதவி தரப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் எண்ணி இருந்தனர். அது நிறைவேறாமல் போனதால் அடுத்தக்கட்ட அரசியல் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.