கரோனா பாதிப்பு காரணமாக பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் முதுகலை படிப்புகள், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான படிப்புகள் ஆகியவற்றில் இறுதியாண்டு தேர்வைத் தவிர, மற்ற தேர்வுகளை ரத்துசெய்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா, என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.
அதேபோன்று முதல் மற்றும் 2, 3 ஆகிய ஆண்டுகளில், அரியர்ஸ் வைத்துள்ள தேர்வுகளும் ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதா என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உயர்கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது, ”இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருப்பதால், அதன்படி ரத்து செய்யப்படவில்லை. அதேபோன்று அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. தேர்வு விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு உரிய அனுமதி மத்திய அரசு அளித்துவிட்டால், இறுதியாண்டு தேர்வுகள் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு உரிய முடிவை எடுக்கும். அதேபோன்று அரியர்ஸ் தேர்வு விவகாரத்திலும் உரிய முடிவு எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 12 லட்சத்தை தாண்டிய கரோனா