தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கேள்வி நேரத்தின்போது, தாம்பரம் திமுக உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா பேசுகையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல பகுதிகளில் நடைபெற்று வரும் பாலப்பணிகளால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், தாம்பரம் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மெட்ரோ ரயில்சேவையை தாம்பரம் வரை நீடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலப்பணிகள் நடைபெறும் போது மணல் பற்றாக்குறையும் நிலவியது. அதுமட்டுமல்லாமல் நிலத்தை கையகப்படுத்தும் போது சிலர் வழக்கு தொடர்வதால் தான் பணிகள் காலதாமதம் ஆகிறது. மற்றபடி அரசு சார்பில் பணிகளை தாமதப்படுத்தவில்லை. பாலப்பணிகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார்.