தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார். அதில், தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரம் ஏரிகள் உள்ளன. ஆனால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. அண்டை மாநிலங்களாக ஆந்திரா தெலுங்கனாவில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏரிகள் தூர்வாரப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, நீர் மேலாண்மைக்காக தனி அமைப்பு உருவாக்கப்பட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் குடிமராமத்து பணிகளுக்கு முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கி ஆயிரத்து 519 ஏரிகள் தூர்வாரப்பட்டன. தற்போது குடிமராமத்து பணி சிறப்பாக நடைபெற்று வருவதால், அதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டும் ஆயிரத்து 829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளன. அதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.