சென்னை ராயபுரம் ஆடுதொட்டி, ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம்(ஏப்ரல்.22) கொருக்குப்பேட்டை ஏகப்பன் தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் இருந்துள்ளார்.
பின்னர், சேகரித்த குப்பையை மின்ட் கண்ணன் ரவுண்டானாவில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அப்போது, அதிலிருந்த கவர் ஒன்றில், பத்து சவரன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, குப்பையில் கிடைத்த நகையை, கொருக்குப்பேட்டை ஆய்வாளர் தவமணியிடம் ஒப்படைத்துள்ளார். விசாரணையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த தேவி என்பவர், தன் நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தேவியை அழைத்துக் காவல் துறையினர் விசாரித்தனர். தேவியின் தாயார் முனியம்மாள் ஆட்டோவில் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, ஏகப்பன் தெரு குப்பைத் தொட்டியில் குப்பை பையுடன் நகைப்பெட்டி வைத்திருந்த பையையும் தவறுதலாக போட்டுவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது. அவரது நகை தான் என்பதை உறுதிப்படுத்திவிட்டு, அவரிடம் தவறவிட்ட 10 சவரன் நகைகளை ஒப்படைத்தனர். மேலும் நகைகளை நேர்மையாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மோகன சுந்தரத்தைப் பாராட்டினர்.
இதையறிந்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தூய்மைப் பணியாளர் மோகன சுந்தரத்தை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இதையும் படிங்க: கென்யாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சா பறிமுதல்!