சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித்தமிழ் விருது வழங்கும் விழாவில், 2020ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. ராசேந்திரனுக்கும், 2021ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியனுக்கும் முதலமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று கலைஞர் ஒன்றிய அரசினைத்தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2006ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான ஒன்றிய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டது.
இவ்விருது, இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச்சான்றிதழும், மு. கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் அடங்கியதாகும். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
பிறகு கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள் 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, தற்பொழுது 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் முதலமைச்சர் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், மேனாள் தமிழ் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் மற்றும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு