சென்னை: மதுபோதையில் சிலர் நேற்று (செப்.29) சென்னை 12G பேருந்தில் ஏறிவிட்டு, தங்களது பேருந்து நிறுத்தமான கே.கே. நகரில் இறங்காமல் சென்றனர். அதன்பின் கே.கே. நகர் ஆர்.டி.ஓவை பேருந்து கடந்து சென்றபோது உடனே பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், பேருந்து நிற்காமல் வேம்புலி அம்மன் பேருந்து நிலையம் வரை சென்றது.
இதனால், கோபமடைந்த போதை ஆசாமிகள் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு கீழே இறங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம், ஆற்காடு சாலை சந்திப்பில் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் கே.கே நகர் காவல் ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதில் கே.கே. நகர் காவல் ஆய்வாளரான பிரபு, தாமதமாக வந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை நடுரோட்டில் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் செந்திலும் ஆபாசமாக திட்ட வாக்குவாதம் முற்றியது. அதன்பின் வாகனவோட்டிகள் முன்பே இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். அதன்பின் சக காவலர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் போக்குவரத்தும் சீர்செய்யப்படவில்லை. வாகனவோட்டிகளும் முகம் சுழித்தனர்.
இதையும் படிங்க: போலீஸ் எனக்கூறி பண மோசடி... 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு...