தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.01) முதல் பொது போக்குவரத்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று முதல் அனைத்து பேருந்துகளுக்கும், கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
அந்த வகையில் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளின் சேவை தொடங்கியது. குறிப்பாக பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிய வேண்டும் .மேலும் அவர்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு கைகளை கிருமிநாசினியால் சுத்தபடுத்த வேண்டும். ஒரு பேருந்தில் 50% மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புறநகர் பகுதியான தாம்பரம் - பெருங்களத்தூர் நோக்கி வரும் பேருந்துகளில், அரசு அறிவித்த விதியினை சற்றும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சில பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செல்லும் அளவிற்கு கூட்டநெரிசல் காணப்பட்டது.
இதனால் பெருங்களத்தூரில் பல மணி நேரமாக வேலைக்கு செல்ல முடியாமல் பயணிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து பேருந்துகளில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படுவதால் பயணிகள் ஏறுவதற்கு அச்சம் காட்டுகின்றனர்.
இதனால் அருகில் இருக்கும் ஆட்டோ, வாடகை கார்களை எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் .மேலும் அரசு அறிவித்த விதியை மீறி பேருந்துகளில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் பயணிகள் அதிக அளவுக்கு பயணிப்பதால், கரோனா பரவும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்!