சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கள் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதேநேரம், இன்று இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சவுந்தரராஜன் கூறுகையில், “அரசிடம் இருந்து இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த அழைப்பும் எங்கள் கூட்டமைப்பிற்கு வரவில்லை. ஊடகம் மூலம் தயாராக இருப்பதாக கூறிக்கொண்டு இருக்கிறார். அது எதுவோ, அவர் தயாராக இருப்பது போலவும், நாங்கள்தான் வராமல் இருப்பது போலவும் ஒரு பொய் தோற்றத்தை மக்களிடம் காட்டுவதற்கு அவர் முயற்சித்து வருகிறார்.
நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கட்டாயமாக நாங்கள் வரத் தயார். ஆனால் இதுவரை எந்த அழைப்பும் அவர்கள் தரப்பில் இருந்து இல்லை. இன்று மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்களில் முற்றுகை போராட்டம் அறிவித்ததற்கு காரணம், போராட்டத்தை தீவிரப்படுத்துவதுதான். அதற்கு காரணம், இந்த போராட்டத்தை உடைக்க அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற சட்ட விரோதமான நடவடிக்கைகள்.
முழுக்க முழுக்க வெளியாட்களை வைத்துக் கொண்டு, சரியாக ஓட்டத் தெரியாதவர்களைக்கூட வைத்து, வண்டியை எடுத்துக் காட்டினால் போதும் என்று இந்த காரியத்தைச் செய்கிறார்கள். ஒரே வண்டியை எடுத்து மூன்று ரூட்டில் மாறி மாறி ஓட்டிக் காட்டி வண்டி ஓடுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இதுவெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற ஏற்பாடு.
வரவுக்கும், செலவுக்குமான தொகையை இதுவரை அவர்கள் கொடுக்கவில்லை. 2022ஆம் ஆண்டு ஏப்ரலிலேயே கொடுத்திருக்க வேண்டிய தொகையை, இன்னமும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், ஓய்வு பெற்றவர்களுக்கு பென்சன் கொடுத்திருக்கலாம், டிஏ உயர்வை பணியில் இருக்கின்றவர்களுக்கு வழங்கி இருக்கலாம்.
18 மாதம் எங்களுக்கு பாக்கி இருந்து இருக்காது. எல்லாமே சரியாகி இருந்திருக்கும். ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை எட்டு ஆண்டுகளாக அவர்கள் நிறுத்தி இருக்கிறார்கள் என்ற உண்மை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல சொல்லாமல் இருந்தால் மக்களுக்குத் தெரியாது என நினைக்கிறார்கள்.
8 ஆண்டுகளாக கொடுக்காமல் இருப்பதற்கான நியாயம் என்ன என சொல்லுங்கள். நிதிச்சுமை என்பது காரணமாகவே இருக்க முடியாது. காரணம், இது எங்கள் பாக்கி, நீங்கள் தர வேண்டியது. சர்வீஸில் இருக்கக்கூடியவர்கள், 2003-க்கு பின்னர் வேலையில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கம் செய்யப்படாமல் உள்ளது.
காலிப்பணியிடத்தை நிரப்பாமல் காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றனர். 15வது ஊதிய ஒப்பந்தம், ஏற்கனவே நான்கு மாதம் கடந்து விட்டது. இந்த நான்கு மாதம் கடந்ததற்கு நீங்கள்தான் பொறுப்பு. எங்கள் கோரிக்கை எதையும் நிறைவேற்றவில்லை. பொங்கலுக்கு பிறகுதான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்கள் அழைக்கும் இடத்திற்கு வருவதாக அமைச்சர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “அது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. பேச்சுவார்த்தைக்கு கூப்பிட வேண்டியது நிர்வாகம்தான். அவர்தான் முதலாளி, அவர்தான் எங்களைக் கூப்பிட வேண்டும். நாங்கள் கூப்பிட்டால் வருவேன் என்று அவர் கூறுவது, மக்களை திசைதிருப்பச் செய்யும் வேலை. நானும் சொல்கிறேன், எங்களை பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுங்கள் என்று, கூப்பிடுங்கள்” என்றார்.
பணிக்கு வராதவர்கள் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “அதற்காக எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். மெமோ அனுப்புவதற்கு பட்டியல் தயாரித்து வருகின்றனர். சிலருக்கு சஸ்பென்ஷன் வரும், அது வரும்போது பார்ப்போம்” என்றார்.
100 சதவீதம் பேருந்துகள் இயங்குவதாக தெரிவிப்பது குறித்த கேள்விக்கு, “அது உண்மையில்லை. தமிழ்நாட்டில் பல பேருந்து நிலையங்களிலேயே பேருந்துகள் கிடையாது. மக்கள் மந்தை மந்தையாக நிற்கின்ற காட்சிகளை கோயம்பேட்டிலேயே நீங்கள் பார்க்கலாம். விழுப்புரத்திற்கு ஓட வேண்டிய 219 சர்வீசில், அவர்களால் 100 சர்வீசை கூட இயக்க முடியவில்லை. சென்னையில் ஒரு பேருந்து எடுத்து, அதையே மூன்று ரூட்களில் மாற்றி மாற்றி ஓட்டிக்காட்டி படம் காட்டுகிறார்கள்” என்றார்.
தொமுச போராட்டத்திற்கு ஆதரவு தராமல் இருப்பது குறித்த கேள்விக்கு, “அது அவர்கள் கட்சி விசுவாசம், அரசியல் விசுவாசம். நாங்கள் அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். உண்மையில் கட்சி, ஆட்சிக்காக, அரசியல் காரணமாக அவர்கள் போராடிய கோரிக்கையை, அவர்களே விட்டு விட்டு நிற்பது தொமுச எடுத்துள்ள தவறான நடவடிக்கை” என்றார்.
இதையும் படிங்க: 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்.. புதுச்சேரியில் 75% பேருந்துகள் இயக்கம்!