மத்திய அரசைக் கண்டித்து விவசாய சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஆறாவது நாளாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை தொழிற்சங்க மையத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை திருவொற்றியூர் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது பேசிய வடசென்னை மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜ், 'டெல்லியில் குளிரிலும் மழையிலும் கிடந்து போராட்டம் நடத்தும் விவசாயிகளை மத்திய அரசு துன்புறுத்தி வருகிறது.
நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளையும்தாண்டி ஒப்பந்த முறையில் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் முறை, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம், கார்ப்பரேட்டுகள் நேரடியாக கொள்முதல் செய்யக்கூடிய முறை உள்ளிட்ட சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து சுங்கச்சாவடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
வேளாண் சட்டத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்