2015ஆம் ஆண்டு நவம்பர் முதல் சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக்கிளைக்கு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. அக்டோபர் 30ஆம் தேதியுடன் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு நீட்டிப்புக்கான உத்தரவு முடியவுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகி, சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு இல்லாத இடங்களில் கொலை முயற்சிகள், போராட்டங்கள் போன்றவை நடைபெற்றுவருவதால், சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் நிரந்தரமாக சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்றம் முழுவதும் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு கொண்டுவந்தால், வழக்கறிஞர்கள் அறைகளுக்கு வரும் வழக்கு தொடர்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பை மறு உத்தரவு வரும்வரை நீட்டித்து உத்தரவிட்டது.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மத்திய தொழிற்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பரிசீலித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டது.