சென்னை: மாதவரம் பொன்னியம்மன் மேடு அய்யர் தோட்டம் பகுதியில், மதரசா இஸ்லாமியப் பள்ளி இயங்கி வருகிறது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவர் கொடுங்கையூரைச் சேர்ந்த அக்தர் (26) என்பவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த இஸ்லாமிய பள்ளியில் பீகாரைச் சேர்ந்த அப்துல்லா (20) என்பவர், சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக இருந்து வருகிறார். இப்பள்ளியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 10 வயது முதல் 12 வயதுள்ள ஆண் சிறுவர்கள் 12 பேர், இஸ்லாமியப் பாடம் கற்க இங்கேயே தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பள்ளியில் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்பதாக ரகசியத் தகவல் வந்ததின் பேரில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராமுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு புழல் உதவி ஆனையர் ஆதிமூலம், மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டபோது அங்கு சிறுவர்கள் பயத்தில் இருந்தது தெரிந்தது.
பின் அவர்களைப் பார்த்தபோது முகம், கை, கால், முதுகு பின்மறைவிடப் பகுதிகளில் அடித்த தழும்புகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், முதலில் அவர்களுக்கு முதல் உதவி அளித்து சிறுவர்கள் 12 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பீகாரில் இருந்து இங்கு இஸ்லாமிய மார்க்க கல்வி பெற சிறுவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக இங்கேயே தங்கவைத்து அவர்கள் பெற்றோர்களிடம் மாதமாதம் பணம் பெறுவார்கள் எனத் தெரியவந்தது. இப்படியாக சிறுவர்களைச் சேர்த்து அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் போது, அவர்களுக்குப் பாடம் புரியாமல் இருந்தால் அவர்களை கம்பாலும் வயரினாலும் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களின் இந்த நிலைமைக்கு காரணமான உரிமையாளர் அக்தர், ஆசிரியர் அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
மீட்கப்பட்ட சிறுவர்கள், அவர்களின் சொந்த ஊருக்கு அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்காக அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அதன்பேரில் மேற்கு மண்டல இணை ஆனையர் ராஜேஷ்வரி டிசம்பர் 18-ம் தேதி பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பீகாருக்கு குழந்தைகளை அனுப்பி வைத்தார். அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த பிறகு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என ராஜேஸ்வரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அக்கா பாசத்திற்காக அடியாளாக மாறி கைதான சிலம்பாட்ட வீரர்; திகு திகு பின்னணி