சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்) குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகளை, களையும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் தமிழகத்தின் இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள 49 இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை கூறினர்.
நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிர்க்கட்சியினர், இஸ்லாமிய அமைப்பினர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மத்திய மாநில அரசு தரப்பில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி தொடர்பாக பொதுமக்களிடையே போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினர் இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இதன் அடிப்படையில் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அமைப்பினர்களை அழைத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அவர்களின் கருத்துக்களைக் கேட்டு அதற்கான விளக்கம் அளிக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திருபாதி மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உள்பட அனைத்து சிறுபாண்மை இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.