அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டும், உரிய இழப்பீடு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக விளக்கமளிக்க தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று (பிப்.3) விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் நிலம் கையகப்படுத்தப்பட்டும் உரிய இழப்பீடு வழங்காமல் 1,053 கோடி ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி 138 பக்க அறிக்கையை காண்பித்தார்.
மேலும் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, 50 லட்ச ரூபாய்க்கு குறைவான தொகை தொடர்புடைய வழக்குகளை கைவிடுவதென வருமான வரித்துறை முடிவெடுத்ததுபோல, அரசும் இதில் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
தற்போதையை பட்ஜெட் கூட்ட தொடரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். சில நேரங்களில் அரசின் அவசர தேவைக்காக, தனியார் நிலங்கள் கையகப்படுத்தாமலேயே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த நீதிபதி, அதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டை செலுத்த கால தாமதம் செய்வதால், சட்டப்படி ஒவ்வொரு நாளுக்கும் அரசு அதிகப்படியான வட்டி செலுத்த வேண்டிவரும், அதிலும் கடைசியில் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும் என்றார்.
இதற்கு விளக்கமளித்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், வீட்டு வசதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைளை எதிர்த்து, கடந்த 1997ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 1,231 வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் முதன்மைச் செயலாளர்களிடம் ஆலோசித்து வருகிறோம். அத்தகைய வழக்குகளில் இழப்பீடு தொகையை விரைவில் அதன் உரிமையாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தலைமைச் செயலாளரின் உத்தரவாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்