சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மீட்புப் பணி நிலவரம் குறித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் 11 செ.மீ சராசரி மழையும், திருநெல்வேலி மாவட்டத்தில் 9செ.மீ சராசரி மழையும் பதிவாகியுள்ளது. அதில் குறிப்பாகத் திருச்செந்தூரில் 23 செ.மீ., மழையும், காயல்பட்டினத்தில் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 18ஆம் தேதி காலையில் அதிக மழை இருந்தது.
18ஆம் தேதி காலை முதல் இன்று மதியம் வரை இந்த இரண்டு இடங்களில் அதிக மழைப் பதிவாகியுள்ளது. அதன்படி, காயல்பட்டினத்தில் இரண்டு நாட்களில் அதிலும் குறிப்பாக 30 மணி நேரத்தில் 116 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. அதுபோல திருச்செந்தூரில் 92 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. ஒரு 30 மணி நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களிலும், தாமிரபரணி ஆற்று ஓரமாக உள்ள கிராமங்கள் நகரங்களிலும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் 1,343 பேர் ஈடுபட்டுள்ளனர்.
அதில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் 375 பேர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர், பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற காவலர்கள் 550 பேர், இந்திய ராணுவம் மற்றும் கடற்படையினர் மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் 168 பேர் என மொத்தம் 1,343 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர இரண்டு மாவட்ட காவல்துறையில் இருந்தும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 160 நிவாரண முகாம்கள் துவங்கப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 680 பேர் மீட்கப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்று இதுவரையில் முகாம்கள் தவிர, கிராமங்கள் மற்றும் நகரங்களில் சுமார் 30 ஆயிரம் உணப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஸ்ரீவைகுண்டம் போன்ற நகரங்களில் இன்றும் கூட படகுகள் மூலமாகக் கூட போக முடியவில்லை. அங்குள்ள மக்களுக்கு ராணுவம், கடற்படை, விமான படையை, கடலோர காவல் படையைச் சேர்ந்த 9 ஹெலிகாப்டர்கள் மூலம் 13 ஆயிரத்து 500 கிலோ உணவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் சேதமடைந்தவற்றை சீரமைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் 64 ஆயிரத்து 900 ஆயிரம் லிட்டர் பாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் பால் விநியோகம் சீரடைந்து விடும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட கடலோர பகுதி, மாநகரின் சில பகுதிகளில் சிறிது தாமதமாகலாம். ஆனால் அங்கு பால் பவுடர் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை மற்ற மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட லாரிகளில் சாப்பாடு, குடிநீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது. மின் விநியோகத்தைப் பொறுத்தவரையில் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முழுவதுமாக மின் விநியோகம் சீரடைந்துள்ளது. ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகளில் மின் விநியோகம் வழங்க வேண்டியுள்ளது.
மின் விநியோகம் சீரமைப்பு: திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1,836 மின் பகிர்மான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அதில் 215 டிரான்ஸ்பார்மர்களில் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 18 சதவீதம் மின் விநியோகம் துவங்கியுள்ளது. காலையில் இருந்து இதுவரையில் 48 பகிர்மான டிரான்ஸ்பார்மர்கள் கூடுதலாக அங்கு சரி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் பகுதிகளில் மின் விநியோகம் துவங்கி உள்ளது. 60 சதவீத பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியாத காரணத்தால் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் முழுவதுமாக வழங்கப்படாமல் உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிக்கியவர்கள்: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கி இருக்கும் மக்களில் இன்னும் மீட்கப்படாதவர்கள் குறித்தும் ரயிலில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று மதியம் வரை மழை. இன்று காலை எடுத்த ரீடிங்கில் 23 செ.மீ., அதி தீவிர கனமழை பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் முயற்சி செய்த போது கூட அங்கு ஹெலிகாப்டரால் செல்ல முடியவில்லை.
ஆனால் நேற்று மாலை அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து முதலமைச்சர் ஆலோசித்தார். அந்த கூட்டத்தில் வழங்கிய ஆலோசனைப் படி இரவில் விமான படையுடனும், கடற்படையுடனும் பேசி இன்று காலை அவர்களிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. இன்று காலை 5.45 மணிக்கு முதல் ஹெலிகாப்டர் மீட்பு பணிக்கு புறப்பட்டது. அதன் மூலமாக ரயிலில் சிக்கியுள்ளவர்களுக்கு காலையில் 10 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு இன்று இரண்டு முறை ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்த மக்கள் ரயில் வழித்தடம் மூலம் நடந்து அருகில் உள்ள பகுதிக்கு வந்து பின்னர் அங்கிருந்து பஸ் மூலமாக மணியாச்சி வழியாக அழைத்து வரப்பட்டு உள்ளனர். ஏற்கனவே அங்குள்ள பாதி பேர் அருகில் உள்ள பள்ளிகளில் போலீசார் மூலம் மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மீட்பு பணிக்கு போதுமான அளவிற்கு ஆட்கள் உள்ளனரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “போதுமான அளவிற்கு ஆட்கள் உள்ளனர். படகுகளும் போதுமான அளவில் உள்ளது. காலையில் 279 படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து படகு எடுத்துவரப்பட்டு தற்போது 323 படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “முதல் பணி பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்பது. அதற்கு பின்னர் முதலமைச்சர் நிவாரண உதவி குறித்து அறிவிப்பார்” எனத் தெரிவித்தார். மீட்பு பணியில் உள்ள படகுகளுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அது தவறான தகவல். மீட்பு பணியில் உள்ள படகுகள், தகவல் தொடர்புக்கான கோபுரங்கள் ஆகியற்றுக்குத் தேவையான டீசல் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தாமதமா? வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகத் தான் கிடைத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ், டெல்லியில் முதலமைச்சர் தெரிவித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி மிக கனமழை பெய்யும். இது தான் வானிலை ஆய்வு மையம் அளித்த எச்சரிக்கை. இந்த எச்சரிக்கை படி நாங்கள் அதி கனமழையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தோம். காயல்பட்டினம் பகுதியில் 2 நாளில் சுமார் 115 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இந்த மாதிரி மழைக்கு எந்த முயற்சி எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணி நடைபெற வில்லை என எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணி நடைபெறாத பகுதிகள் குறித்து லிஸ்ட் எடுத்து விமானப் படை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், இன்று 4 மணிக்கு மேல் அங்கு மீண்டும் மேகமூட்டமாகக் காணப்பட்டது. அதனால், ஹெலிகாப்டர் சேவையைத் தொடரமுடியவில்லை. 18 ஐஏஎஸ் அதிகாரிகள், 9 அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்புப் பணிகளில் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல கிராமங்களில் படகு மூலமாக மீட்புப் பணி நடைபெற்றுள்ளது. படகு மூலம் செல்ல முடியாத இடங்களில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்புப் பணி நடைபெற்றுள்ளது. இரவில் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்பதால் மாலைக்குள் இரவு உணவு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்” என பதிலளித்தார்.
மழையால் நேர்ந்த உயிரிழப்புகள்: உயிரிழப்பு குறித்த கேள்விக்கு, “இதுவரை மொத்தம் 10 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 7, தூத்துக்குடி மாவட்டத்தில் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்தவர் 1, 1 இயற்கை மரணம் என 10 பேர் உயிரிழந்துள்ளனர்” என பதிலளித்தார்.
சென்னையை ஒப்பிடும் போது தென் மாவட்டங்களில் மீட்புப் பணி எப்போது முடியும் என்ற கேள்விக்கு, “சென்னையை இதனுடன் ஒப்பிட முடியாது. சென்னை முழுவதும் நகர்ப்புறமான பகுதி. சென்னையில் தொடர்பு கொள்வதில் பிரச்சினை அந்த அளவிற்கு இல்லை. ஆனால் இங்குக் கிராமங்கள் அதிகளவில் இருப்பதால் மக்களைத் தொடர்புகொள்வதில் பிரச்சனை உள்ளது.
சென்னையில் ஒரு பகுதியில் பல நிறுவனங்களில் டவர் இருக்கும். அதனால் ஒரு நிறுவனத்தில் சேவை இல்லை என்றால் மற்றொரு நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த முடியும். ஆனால் இங்கு ஒரு ஊரில் ஒரு நிறுவனத்தின் டவர் தான் இருக்கும். அதனால் டிஜிபி இங்கிருந்து 200 வயர்லெஸ் கூடுதலாகத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கி உள்ளார். அந்தந்த கிராமங்களில் காவலர்களிடம் வயர்லெஸ் கொடுத்து அதன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி எடுத்து உள்ளோம்” என பதிலளித்தார்.
கால்நடைகள் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு, “திருநெல்வேலி மாவட்டத்தில் 23 எருமை, தென்காசி மாவட்டத்தில் 3 எருமை என மொத்தம் 26 எருமை, 297 ஆடுகள், 110 கன்று, கோழி 29 ஆயிரத்து 500 உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. 304 குடிசை பாதிப்பு (பகுதி), 206 முழுமையாகப் பாதிப்பு” என பதிலளித்தார்.
மீட்பு பணிக்கு சென்ற 3 தீயணைப்பு வீரர்கள் மாயமானது குறித்த கேள்விக்கு, “மீட்பு பணிக்கு சென்ற மூன்று பேரால் தொடர்பு கொள்ள முடியாததால் அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. இன்று காலை அவர்கள் பத்திரமாக ஒரு கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது” என பதிலளித்தார்.
இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை நாட்கள் ஆகும் என்ற கேள்விக்கு, “பாதிப்புகள் அதிகம் இருப்பதால் மீட்பு பணிக்குத் தாமதம் ஆகிறது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில், விமான நிலையம் அருகே ஒரு 120 மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. பாதிப்புகள் முழுமையாக கண்டறியபட்ட பின்னர் தான் மீட்பு பணி முடிவடைவது குறித்து முழுமையாக கூறமுடியும்” என பதிலளித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாத கால அவகாசம் நீட்டிப்பு!