உலகின் மிகப்பெரிய ஆன்மிக அமைப்பான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர், தாதி ஜானகி. தன்னுடைய சிறுவயதிலேயே ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்த அவர், 104ஆவது வயதிலும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி இன்று அதிகாலை முக்தி அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன். ராஜயோகினி தாதி ஜானகி அவர்கள் 2007ஆம் ஆண்டிலிருந்து உலகளவிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தை வழி நடத்தி வந்தவர். இவர் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, சாதி சமய இன வேறுபாடின்றி, தியானத்தின் மூலம் அமைதி மற்றும் நற்பண்புகளுடன் வாழும் ஆன்மிக வழியை புகட்டியவர்.
மக்களிடையே ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர உழைத்தவர். பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக ஆக்குவதில், இவருடைய உழைப்பும், முயற்சியும் குறிப்பிடத்தக்கது. ராஜயோகினி தாதி ஜானகியின் பிரம்மா குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் பிரம்மா குமாரிகள் இயக்கத்தை பின்பற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கரோனா எதிரொலி: தமிழ்நாடு சிறைகளிலிருந்து 2,642 விசாரணைக் கைதிகள் விடுவிப்பு!