தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, ஒருபுறம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களை சந்தித்து வருகிறார். மற்றொருபுறம் தனது சொந்த ஊரான தேனியில் இருக்கும் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.-க்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம்; முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதங்களுக்கு பகவத் கீதை உரையாடல் மூலம் மறைமுகமாகப் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.
துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "தமிழ்நாடு மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த ட்விட்டர் செய்தி, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. தர்ம யுத்தம் 2.0-ஐ ஓபிஎஸ் தொடங்கி விட்டாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ட்வீட் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'முதலமைச்சர் வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்' - அதிமுக எம்.எல்.ஏ