சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் தலைமையில் நடந்தது. இதில் தொழிலாளர் நலத்துறை ஆணையர், வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்பாக அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை செய்கின்றோம். கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நேரத்திலோ அல்லது வெளியிடங்களில் மரணமடைந்தாலும் அவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த உதவித் தொகையை தற்போதைய முதலமைச்சர் உயர்த்தி வழங்க இருக்கிறார்.
30 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கட்டுமானத் தொழில் நலனுக்காக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குகின்றோம். முதற்கட்டமாக 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை விரைவில் வழங்க உள்ளோம். இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
பாதுகாப்பு உபகரணங்கள், தொழிலாளர்களுக்குத் தேவையான தலைக்கவசம், கையுறை, மேலாடை உள்ளிட்ட பொருட்கள் அடங்கியுள்ளன” என்று தெரிவித்தார்.