தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகளும், ஏனைய 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இருப்பினும் கோவை, ஈரோடு மாவட்டங்களில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
இந்நிலையில் 21ஆம் தேதிக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர், அலுவலர்களுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பொதுப் போக்குவரத்து, சிறிய ஜவுளிக் கடைகள், சிறிய வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 'திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபாடுவோம்' - ராகுல்