சென்னை: இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பணியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை பட்டினபாக்கத்தில் நேற்று (ஜனவரி 10) தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் (காவேரி) மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,”முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி என்னும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்." என்று தெரிவித்துள்ளார்.