பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.10) காலமானார். குறிப்பாக குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் பாலியல், நரம்பியல் பிரச்னை தொடர்பாக முக்கியமான பேசுபொருளாக இருந்தது. 90 கிட்ஸ் மத்தியில் சேலம் சிவராஜ் மிகவும் பிரபலம்.
தொலைக்காட்சி உரையாடலின்போது அடிக்கடி "பேர பிள்ளைங்களா உங்க தாத்தா சொல்றேன் கேளுங்கள்" என அன்போடு பேசுவார். இதனாலேயே சிவராஜ் தாத்தா என்றும் 90ஸ் கிட்ஸ்களால் அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், "சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்த வைத்தியர் சிவராஜ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.10) காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் பல தலைமுறைகளாக சித்த வைத்தியத்தில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தவர்.
'நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் சொல்'
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க சிவராஜ் சிவக்குமார் சித்த வைத்தியத்தில் பல சாதனைகள் மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். அவரது மறைவு சித்த மருத்துவத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்! - அனைத்துக்கட்சிகள் வலியுறுத்தல்!