சென்னை ராணி மேரி கல்லூரி எதிரில், சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 'நம்ம Chennai' என்ற செல்ஃபி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் 'நம்ம Chennai' செல்ஃபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழும் மெரினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மெரினாவின் நினைவாக செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வகையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 அடி உயரம், 25 அடி நீளத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இதனை திறந்துவைத்தவுடன் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் இந்த மையம் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல், இ-பைக், நியூ ஜெனரேஷன் சைக்கிள்களை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்துவைத்தார். மிதிவண்டி பகிர்மான திட்டமானது 9.50 கோடி முதலீட்டில் 378 மிதிவண்டி நிலையங்களில் 5 ஆயிரம் மிதிவண்டிகளுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, தற்போது 78 மிதிவண்டி நிலையங்களில் 500 மிதிவண்டிகள் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளன.
சென்னையில் ஏற்கெனவே கிட்டத்தட்ட 500 சாதாரண சைக்கிள்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 1000 சைக்கிள் பயன்பாட்டுக்கு வந்தது. அதில் செயின் அற்ற, பஞ்சர் ஆகாத நியூ ஜெனரேஷன் சைக்கிகள் 500, இ-சைக்கிள்கள் 500. இ-பைக்குகள் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுவை குறைப்பதுடன், மின்சார சார்ஜில் இயங்கும் தன்மை கொண்டது.