தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று (ஜூலை 13) வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் முதலமைச்சர் பழனிசாமி உள்பட யாருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, தங்கமணி ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்