இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி பாசனபரப்பில் அமைந்துள்ள கோடைமேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து விவசாயிகளிடமிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்., 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து 1400 க.அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் பாசனம், கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
மேலும், வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்) மற்றும் கோடகன் கால்வாய் (6000 ஏக்கர்) ஆகியவைகளின் கீழூள்ள 24 ஆயிரத்து 90 ஏக்கரில் நேரடி, மறைமுகப் பாசன பரப்புகளில் கார் சாகுபடியாக பயிரிடப்பட்ட பயிர்களுக்காக செப்.,16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 46 நாள்களுக்கு நாளொன்றுக்கு 800 க.அடி விநாடி வீதம் மொத்தம் 4993.92 மி.கன அடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்கள், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், ஏரல், திருசெந்தூர் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!