சென்னை: வில்லிவாக்கம், திருவள்ளூர் நெடுஞ்சாலை, சிவசக்தி காலனி மைதானத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில், 2,500 கோயில்களின் திருப்பணிக்கு ரூ. 50 கோடி நிதி வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருக்க கூடிய உதவிகள் மூலம் ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 பேர் பயனடைந்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாகப் பயனடைந்தவர்கள் இவர்கள். அனைத்து துறையும் வளர வேண்டும் என்று எண்ணுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கும் முயற்சிகளில் நிறைய ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் மிகுந்த பணிவோடு இந்த விழாவின் மூலமாக தெரிவிக்க விரும்புவது, நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இதை அறிய வேண்டியவர்கள் அறிந்து கொண்டால் போதும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய ஆட்சி மலர்ந்ததற்கு பிறகு, திருக்கோயில்களுக்கு ஏராளமான பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாக தான் இந்த விழா. இந்தத் திருக்கோயில் பணிகளைப் பொறுத்தவரையில் நாங்களாக எதையும் செய்யவில்லை. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான் இந்த செயல்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழைய நிலையில் இருக்கக்கூடிய அந்தக் கோயில்களை புதுப்பிக்க, அப்படி புதுப்பிக்கும் நேரத்தில், பழமை மாறாமல் அதை சீர்செய்ய குடமுழுக்கு விழாவை நடத்த இந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களைப், பழமை மாறாமல் சீர் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
2022-2023ஆம் ஆண்டிற்கான 165 அறிவிப்புகளில் 135 அறிவிப்புகளின் மூலம் 2,578 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் 2022 – 2023ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் இடம் பெறாத அறிவிப்பு தான் இப்போது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இது அறிவிக்கப்படவில்லை. 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
திருவாரூரில் பல்லாண்டு காலமாக ஓடாது இருந்த தேரை ஓட வைத்த பெருமை யாருக்கு என்று கேட்டீர்களானால், மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு தான். தேர் வரும் பாதையைச் சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. கோயில்கள் நமது கலைச் சின்னங்களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத்திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நமது கலைத் திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
அத்தகைய கோயில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்பதிலே நமது முழுக் கவனம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்குத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நாம் கொண்டு வந்தோம். இது மட்டும் அல்லாமல் அன்னைத் தமிழ் மொழி ஆலயங்களில், நம்முடைய தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம்.
சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும். மனிதர்களில் மட்டுமல்ல கோயில்களிலும் நகரக் கோயில், கிராமக் கோயில் என்றும் பணக்காரக் கோயில், ஏழை கோயில் என்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது. கிராமப்புறக் கோயிலாக இருந்தாலும், ஏழ்மையான கோயிலாக இருந்தாலும், ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந்தாலும் அனைத்தையும் ஒன்று போலக் கருதி, உதவி செய்யக்கூடிய அரசு தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.
மதம், சாதி வேற்றுமை மட்டுமல்ல கோயில், சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறைத் தலங்களையும் கண்ணும் கருத்துமாக நாம் இன்றைக்கு கவனித்து வருகிறோம். அதனால் தான் இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய சமயச் சான்றோர்கள் மட்டுமல்ல, இன்னும் பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் - ஆளுநரால் வெடித்த சர்ச்சை