சென்னை: அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நூற்றைம்பது ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத் தனது 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்து நிறைவேற்றிய முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை தி.மு.க சார்பிலும், அவரது வழியில் நடக்கும் திராவிட மாடல் அரசின் சார்பிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.
அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த அண்ணா அறிவாலயத்தில் நாம் கூடியிருக்கிறோம். இந்த அறிவாலயம் அமைந்துள்ள அண்ணா சாலையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளையும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களையும் உருவாக்கியவர் கருணாநிதி.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல், குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வரை தமிழ்நாடெங்கும் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியவர் அவர். மினி பஸ், மெட்ரோ ரயில், டைடல் பார்க், உழவர் சந்தை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என நாம் பட்டியலிடத் துவங்கினால் இன்று முழுவதும் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். இப்படி திட்டங்கள் பல தீட்டி ஒவ்வொரு தமிழரும் சுயமரியாதையுடன் வாழ ஓயாது பாடுபட்ட தலைவர் அவர்.
இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைத்தான், மத்திய அரசுகள் நடைமுறைப்படுத்தின. இப்போதும் நடைமுறைப்படுத்துகின்றன. இப்படிப்பட்டவரின் வரலாற்றை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதனால்தான் திமுக தலைமைக் கழகம், மாவட்டக் கழக நிர்வாகங்கள் மட்டுமின்றி கழகத்தின் சார்பு அணிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஊராக இருந்தாலும் அதில் கருணாநிதி ஆட்சியின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கும். அதையெல்லாம் நீங்கள் கவனித்து, அந்தந்த ஊர் மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
காணொலிகளாக, துண்டுப் பிரசுரங்களாக வழங்க வேண்டும். எல்லா இடத்திலும் எல்லோர் மனதிலும் கருணாநிதியின் பன்முக ஆற்றலை, சாதனைகளை, அதனால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற நன்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை மட்டுமல்ல, நமது இனம், மொழி வாழ அயராது பாடுபட்டவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன், இதனை முழுமையாக நிறைவற்றிட வேண்டும். எனவே, செப்டம்பர் 17க்குப் பிறகு, கழகத்தின் 75வது ஆண்டு பவள விழாவும் கொண்டாடப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, 2024 ஜூன் 3 அன்று, கருணாநிதியின் பிறந்தநாளில் நாம் நன்றிக் காணிக்கை செலுத்துவோம்" என கூறினார்.
இதையும் படிங்க: Cm House bomb threat : முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் திடீர் மிரட்டல்!