சென்னை: சுவாசக்கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் இன்று (ஆக.13) இரவு காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன் அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1500 ஆண்டுகள் பழமை மிக்க மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியாக - சைவ சித்தாந்தத்தை பரப்பும் ஆன்மீகப் பணியில் அருந்தொண்டாற்றியவர். மிகச் சிறந்த பத்திரிக்கையாளராகவும் விளங்கிய மதுரை ஆதீனம் அவர்கள் பல்வேறு மக்கள் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் பேரன்பிற்கு உரியவராகத் திகழ்ந்தவர்.
அவரது மறைவு ஆன்மீகவாதிகளுக்கும், சைவ சமயத் தொண்டிற்கும் பேரிழப்பாகும். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மதுரை ஆதீனம் காலமானார்