சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் 175வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நினைவாக கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் 2 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் அயோத்திதாச பண்டிதருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.01) திறந்து வைத்தார். இது குறித்து காணொளி வாயிலாக பேசுகையில் "தமிழ்நாட்டின் அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளியாக திகழ்ந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு கடந்த 03.09.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தோம்.
அதன் படி, இன்று கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ‘அறிவொளி இல்லம்’ என அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்திதாசரின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
தமிழர், திராவிடர் என்பதை மொழி, கலாச்சாரம் என்பதை தாண்டி அதனை அடையாள சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசர். 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பூர்வகுல தமிழர்கள் என குறிப்பிட கூறியவர் பண்டிதர். 1891ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபை எனும் இயக்கத்தை ஆரம்பித்தார். 1907ஆம் ஆண்டு ஒரு பைசா தமிழன் எனும் இதழை ஆரம்பித்தார்.
ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறினார் பண்டிதர் அயோத்திதாசர். எழுத்தாளர், ஆய்வாளர், மானுடவியல் பதிப்பாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழி புலவர், மொழியியல் வல்லுநர், பன்மொழி அறிந்தவர், சிறந்த செயல்பாட்டாளர் என மண்முகம் கொண்டவர் அயோத்திதாசர். 150 ஆண்டுகளாக இயங்கும் தமிழர் அறிவியல் இயக்கத்தை தோற்றுவித்தவர்.
இவர் அமைத்துக் கொடுத்த அறிவுத் தளத்தில்தான் 150 ஆண்டுகால தமிழர் அறிவியக்கம் செயல்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சாதி, மதம் என உரக்க கூறியவர். 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் நினைவாக 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழர்களின் இரவு பகலற்ற அறிவொளியாக அயோத்திதாசர் விளங்குகிறார்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!