சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.22) டிஜிபி அலுவலகத்திற்கு வருகை புரிந்து ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் சுற்றுசூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார். இதனையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து எழுதியுள்ளார்.
அந்த பதிவேட்டில், தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவதாக முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துகளை காவல்துறை பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், காவல் துறை உங்கள் நண்பன் என்ற காவல் துறை வாசகமே சமூக நீதி, சமத்துவம், மனித கொள்கைகளை கடைப்பிடிப்பதை பறைசாற்றுகிறது என தெரிவித்துள்ளார். காவல் துறை அதன்படி செயல்படுவதை நான் பாராட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் போற்றும் வகையில் பணியாற்றி வரும் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து உயர் காவல் துறை அலுவலர்கள், அவர்களுக்கு துணை நிற்கும் காவலர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவிப்பதாக பதிவேட்டில் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வுக்கு படித்துத்தான் ஆக வேண்டும்'