சென்னை: வேளச்சேரி அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி (30) மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் லியோரா ஸ்ரீ (10) அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 21) காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக கீர்த்தி மற்றும் அவரது மகள் லியோரா ஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவிலம்பாக்கத்தில் உள்ள பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலால் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளது.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் லியோராஸ்ரீ தலையில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து உள்ளார். இதில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து விபத்தை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக, லியோராஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
லாரி ஓட்டுநர் கைது: பள்ளிக்கரணை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் டேவிட் ராஜனை கைது செய்து உள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க: மது அருந்த பணம் கேட்டு டார்ச்சர்... மகனை அடித்துக் கொன்ற தாய்!