தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆனால், கடந்த சில நாள்களாகச் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், இறந்தோர் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. இதுவரை 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரோனா அச்சம் மக்களைத் துரத்தினாலும், தண்ணீராலும் கரோனா பரவுகிறது என்ற வதந்தியும் மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.
சென்னையில் வசிக்கும் மக்கள் தண்ணீருக்காகப் படும் வேதனைகளைச் செய்திகள் மூலம் நாம் அறிந்து வருகிறோம். ஆனால், இந்தக் கரோனா காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடுக்கு வேலையே இல்லை என குடிநீர் சுத்திகரிப்பு வாரியத்தின் செயல் இயக்குநர் பிரபு சங்கர் தெரிவிக்கிறார்.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியத்தின் செயல் இயக்குநர் பிரபுசங்கர் ஈடிவி பாரத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில், "சென்னையில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதற்கு அலுவலர்கள், லஞ்சம் கேட்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கரோனா வைரஸ் தண்ணீரில் வாழ முடியாது என்பதே உண்மை. தண்ணீரில் அவை விழுந்தவுடன் செயலிழந்துவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருப்பதால், தண்ணீரால் கரோனா பரவும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அதுகுறித்து பயம் கொள்ளவும் வேண்டாம். ஆயினும், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சென்னை குடிநீர் வாரியம் தண்ணீரைத் தொடர்ந்து சுத்திகரித்தே வழங்குகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இனி தண்ணீர் லாரி வந்தவுடன் ஓட வேண்டியதில்லை' - குடிநீர் வாரியத்தின் முயற்சிக்கு சென்னைவாசிகள் வரவேற்பு!