வடபழனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஜி. கண்ணன், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பது போலவும், அவரிடமிருந்து கவரில் பணம் வாங்கி பாக்கெட்டில் வைத்துச் செல்வது போலவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பதிவான நிகழ்வு, ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
வடபழனி பகுதியில் சூதாட்ட கிளப், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வாளர் கண்ணன் கையூட்டு வசூலிப்பதாகக் கூறி காவலர்கள் வாட்ஸ்-குழுவில் இவ்வீடியோ பரவிவருகிறது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட ஆய்வாளர் கண்ணனிடம் கேட்டபோது, வீடியோவில் பதிவான சம்பவம் கரோனா ஊரடங்கிற்கு முன்பு நடந்த சம்பவம் என்றும், தனிப்பட்ட முறையிலான கொடுக்கல் வாங்கலைச் சித்தரித்து தன்னைப் பழிவாங்கும் நோக்கில் காவல்துறையில் உள்ள சிலர் செயல்படுவதாக விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், கையூட்டு பெற்றது உண்மை என நிரூபணம் ஆனால் கண்ணன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது!