கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கரோனா பரவலின் தீவிரம் காரணமாக, சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகளுக்கு மத்திய அரசு தடைவிதித்திருந்தது. கரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கும் - இங்கிலாந்திலிருந்து இந்தியா வருவதற்கும் விமான சேவைக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவுக்கான விமான சேவைகளை ரத்துசெய்தது.
இந்த முதல் விமானம் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று சென்னையை வந்தடைய உள்ளது. பிறகு லண்டனிலிருந்து ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்தும் விமான சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீட்டிப்பு
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் விமானம், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் விமானம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இந்தத் தடையானது, சர்வதேச சரக்கு விமான சேவைகளுக்குப் பொருந்தாது.
சர்வதேச விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான பாதைகளில் திட்டமிட்டப்படி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூலை 31ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த தடையை ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நீட்டித்து, கடந்த ஜூலை 30ஆம் தேதி விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.