சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டுநர்களின் நடத்தை மற்றும் வாகன விதிமீறல்களை CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓ.எம்.ஆர்.சாலை, ஈ.சி.ஆர் சாலை, 100-அடி சாலை, வெளி வட்ட சாலை (Outer Ring road), உள்ள வட்ட சாலை ஆகிய பகுதிகளில், கேமராக்கள் மூலம் சாலை போக்குவரத்தை கண்காணித்து, விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் மொபைல் எண்ணுக்கு ஆன்லைன் மூலம் இ-சலான் அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி, போலியான இ-சலான் அணுப்பி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் தற்போது நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இது போன்று போலி இ-சலான் அனுப்பி அடையாளம் தெரியாத நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கும்பல் போக்குவரத்து காவல் துறை பெயரை பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். மேலும் அதில் ஆன்லைனில் அபராதத் தொகையைச் செலுத்துமாறு போலியான இணையதள முகவரியையும் குறிப்பிடுகின்றனர்.
மக்கள் அந்த இணைப்பைக் கிளிக் செய்து போலியான இணையதளத்திற்குச் செல்லும் போது, அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை திருடி, டெபிட், கிரெடிட் (Debit, Credit) கார்டில் இருந்து பணத்தை மொத்தமாக திருடுடி விடுகின்றனர். எனவே இதுபோன்ற போலியாக வரும் குறுஞ்செய்திகளின் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், உண்மையான இ-சலானில் வாகனம் சார்ந்த விவரங்கள், இயந்திரம் மற்றும் சேஸ் எண்கள் (chassis number) போன்ற தகவல்கள் இருக்கும் என்றும், மோசடி கும்பல் பயனர்களை ஏமாற்றும் வகையில் இணையதள முகவரியை மாற்றி அமைக்கின்றனர் என்றும் மத்திய அரசு சைபர் பாதுகாப்பு பிரிவில் இருந்து அண்மையில் தெரிவிக்கப்ட்டிருந்தது.
உண்மையான மற்றும் போலியான இணையத்தின் வித்தியாசம்: இதனைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகர காவல் சார்பில், போக்குவரத்து விதிமீறல் குறித்த அபராத ரசீது லிங்க்குகளை போலியாக அனுப்பி ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசின் அபராதம் செலுத்தும் இணைய முகவரியைப் போலவே, மோசடி கும்பல் உருவாக்கியுள்ள இணையதளம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
மேலும், அந்த லிங்க்கை க்ளிக் செய்தால் நமது வங்கிக் கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு, பணம் திருடப்படுவதாகவும், மோசடி கும்பல் அனுப்பும் குறுஞ்செய்தியும், அரசு தரப்பில் அனுப்பும் உண்மையான குறுஞ்செய்தியும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருப்பதாகும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் காவல்துறை அனுப்பும் உண்மையான குறுஞ்செய்தியில் அபராத ரசீது லிங்க்குகள் (gov.in) என்றே முடிவடையும் என்றும் (.in) என மட்டும் முடிவடையும் லிங்க்குகள் போலியானவை என காவல்துறை விளக்கமளித்துள்ளனர். மேலும் போலியான ரசிது பெற்றால் அது குறித்த தகவலை காவல் துறையிடம் தெரிவிக்குமாறும், அரசின் உண்மையான இணையத்தை சரியாக கவனித்து அதில் அபராதத்தை செலுத்துமாறு காவல் துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.