சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானத்தில், ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்ப கோளாறை சீர் செய்ததால், விமானம் 3 மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் இரவு 8:30 மணிக்குச் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால், விமானத்தில் இருந்த 168 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 175 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.
வழக்கமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று மாலை 5:30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 168 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 175 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்த நிலையில், விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தீடீர் தொழில் நுட்ப கோளாரை தக்க நேரத்தில் விமானி கண்டுபிடித்துள்ளார்.
இந்த நிலையில் விமானம் வானில் பறந்தால் மிகப்பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து, விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், விமானி இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். பின்னர் ஓடுபாதையில் பழுதடைந்து நிறுத்தப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை, இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே, இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளர்கள் குழு விமானத்துக்குள் ஏறி, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்தனர். அதுவரையிலும் பயணிகள் அனைவரும் விமானத்துக்களையே அமர வைக்கப்பட்டிருந்தனர். இரவு 8 மணி வரை விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் விமானி, மீண்டும் விமானத்தில் இயந்திரங்களை சரிபார்த்தார். பின்னர் தொழில்நுட்ப கோளாறு முழுமையாக நீக்கப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த பிறகே, விமானத்தை மீண்டும் இயக்க விமானி சம்மதித்துள்ளார்.
அதன்படி இந்த விமானம் இன்று இரவு 8:30 மணி அளவில் மீண்டும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, டெல்லிக்கு 3 மணி நேரம் தாமதமாக, புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அதிர்ஷடவசமாக 175 பேர் உயிர்த்தபினர். இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னை ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் கூடுதல் சர்வதேச விமான சேவை அதிகரிப்பு!