ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள், பூஜை பொருள்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். சென்னை புறநகரை பொறுத்தவரையில் ஆயுத பூஜைக்கு ஓரிரு நாட்கள் முன்பாக தாம்பரம், பல்லாவரம் உள்பட சந்தைகளிலும், கடை வீதிகளிலும் மக்கள் ஆர்வமாக கூடி தேவையான பழ வகைகள், வாழை கன்றுகள், மாவிலை தோரணங்கள், அவல், பொறி, கடலை, பூஜை பொருள்கள் ஆகியவை வாங்குவார்கள்.
இந்நிலையில், இந்தாண்டு நாளை (அக்.25) ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது தாம்பரம் சண்முக ரோட்டில் உள்ள சந்தைகளில் அதிக அளவில் வியாபரிகள் கடைகளை திறந்து ஆயுத பூஜைக்கு தேவையான பழ வகைகள், வாழை கன்றுகள், மாவிலை தோரணங்கள், அவல், பொறி, கடலை, பூஜை பொருள்கள் என கடையில் குவித்து விற்பனையை தொடங்கியுள்ளனர்.
இந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் குறைந்த அளவில் சந்தைகளுக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனாலும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடக்குமா? என வியாபாரிகள் வேதனை தெறிவிக்கின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்; ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பழ வியாபாரம் களைகட்டத் தொடங்கும். இந்த ஆண்டு கரோனா தொற்று பிரச்னை இருப்பதால் வியாபாரம் கடுமையாக பாதித்திருக்கிறது.
இந்நிலையில், இன்று (அக் .24) காலையிலிருந்துதான் மக்கள் சந்தைக்கு வர தொடங்கியுள்ளனர். தற்போது வரைக்கும் வியாபாரம் மந்த நிலையிலேயே இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆயுத பூஜையை ஒட்டி களைகட்டும் பூக்கள் விற்பனை!