சென்னையில் இதுவரை இல்லாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையை மாற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள முக்கிய நீர்நிலைகளை தூர் வாருவது, குளங்கள், குட்டைகளை மேம்படுத்தும் பணிகளையும் மாநகராட்சி துரிதப்படுத்தியது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 2 லட்சம் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. அப்பணிகளை முறையாக செயல்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி ஏற்கனவே 1,62,284 கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதால், தற்போது வரை பெய்த மழையினால் நான்கு அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த 69 ஆயிரத்து 490 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 38 ஆயிரத்து 507 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்த ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என சென்னை வாசிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.