சென்னை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் குடித்து விட்டு, அப்பகுதியில் தகராறு செய்ததை தங்கமணி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இந்த முன் விரோதம் இருந்த நிலையில், பிராட்வே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்த தங்கமணியிடம், குடிபோதையில் பைக்கில் வந்த பாலாஜி, அவரது நண்பர்கள் ஸ்ரீநாத், ஏலிய்யா ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.
இதை தட்டிக்கேட்ட தங்கமணியை, மூவரும் சேர்ந்து பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு நடைபெற்றது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட பாலாஜி, ஸ்ரீநாத், ஏலிய்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி காவல் துறை தரப்பில் நிரூபித்துள்ளதாகக் கூறி, மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: திருமண சான்றிதழுக்கு லஞ்சம் பெற்ற பெண் சார் பதிவாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!