சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 92 நடுநிலைப்பள்ளிகளும், 119 தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்வியாண்டில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 66,414 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சென்னைப் பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறன், கற்றல் திறன், விமர்சனம் எழுதுதல், பேச்சுத்திறன், வரைதல் மற்றும் குறு நாடகம் ஆகிய திறன்களை வளர்த்திடும் வகையில் பள்ளி நூலகங்களிலிருந்து கதை, கவிதை, நாடகம், கட்டுரை, வரலாறு, இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களைப் பெற்று வீட்டிலும் விரும்பி வாசித்துப் பயன்பெறும் வகையில் “பள்ளி இல்ல நூலகமானது” (SCHOOL LENDING LIBRARY) கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவ, மாணவியர்கள் வாசிக்கும் திறனை அதிகரிக்க இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நூலகங்களில் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று பயனடையும் மாணவர்களின் விவரங்கள் பெறப்படுகின்றன.
அதனடிப்படையில், இந்தப் பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதம் 12,256 மாணவ, மாணவியரும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 13,324 மாணவ, மாணவியரும் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று இல்லங்களுக்கு எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி பயனடைந்துள்ளனர்.
ஏறத்தாழ மாதம் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இல்லங்களுக்கு எடுத்து சென்று படித்த புத்தகங்களில் உள்ள கருத்துக்களை பள்ளிக்கு வந்து மற்ற மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக"