சென்னை ராயபுரத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பப்லு என்பவர் கட்டுமான பணியில் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ராயபுரம் ரயில்வே நிலையம் அருகே தற்காலிக குடியிருப்பில் வசித்துவருகிறார். கடந்த 6ஆம் தேதி தன்னிடம் வேலை கேட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபரை வேலை வாங்கி தருவதாக வீட்டில் தங்கவைத்தார். அப்போது பப்லு வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த நபர் பப்லுவின் மூன்று வயது மகளான மரிஜூன என்ற குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தனது குழந்தையை காணவில்லை என்று பப்லு அப்பகுதி முழுவதும் தேடி உள்ளார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராயபுரம் காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்கள் வைத்து குழந்தையை கடத்திச் சென்ற நபரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (செப்.16) செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள கட்டுமான கட்டடத்தில் குழந்தையை கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட குழந்தையை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் குழந்தை கடத்தல் - காவல்துறை வலைவீச்சு