கோவையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை மாநில அளவிலான 10 மீ, 25மீ, 59மீ துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 113 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குவ் சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், ”10 ஆண்டுகளுக்கு பின் சென்னை ரைபிள் கிளப் மாணவர்கள் 113 பதக்கங்களை பெற்று மாநில அளவிலான போட்டிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். அதில் 40 பேர் தென் மண்டல போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் அதிலும் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புள்ளதால் சிறந்த முறையில் பயிற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.