சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைவாணனை பி.வி.காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் முன்விரோதம் காரணமாக, தன் நண்பர் ராஜ் என்பவருடன் சேர்ந்து, 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் கல் மற்றும் மூங்கில் கட்டையால் கொடூரமாகத் தாக்கி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைவாணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது சகோதரி அளித்த புகாரில், எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இது தொடர்பான வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கு.புவனேஸ்வரி முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார்.
பின்னர், இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சேலத்தில் பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி - விசிக பெண் நிர்வாகி கைது!