சென்னை: பிரதமர் நரந்திர மோடி இன்று (அக்.13) காலை தொடங்கி வைத்த 'கதி சக்தி திட்டம்' (Gati Shakthi Master Plan) தொடர்பாக சென்னை துறைமுகத் தலைவர் சுனில் குமார் பலிவால், துறைமுக அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் தொடங்கியிருக்கும் கதி சக்தி திட்டத்தின் மூலம் மத்திய அரசின் ரயில்வே துறை, துறைமுகம் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை, சாலை போக்குவரத்து துறை உள்ளிட்ட 16 துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும்.
இதன் மூலம் மத்திய அரசு நிறுவனங்கள் செயல்படுத்தும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த தகவல்கள் ஒருங்கிணைந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தொலைநோக்கு திட்டங்கள்
இதன் மூலம் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைந்து பணிகள் விரைவாக நடைபெறும். மத்திய அரசிடம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் அதற்கு மேற்பட்ட காலம் செயல்படுத்த உள்ள தொலைநோக்கு திட்டங்கள் குறித்த தகவல்களை அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பப்பட உள்ளது.
பிரதமரின் கதி சக்தி திட்டத்தை செயல்படுத்த அதிகாரத்துடன் கூடிய செயலாளர்கள் குழு ஏற்படுத்தப்படும். அமைச்சரவை செயலாளர் இதற்கு தலைமை ஏற்பார் என்று சுனில் குமார் பலிவால் தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்வது குறித்தும், துறைமுக முனையத்தில் ஒரே நேரத்தில் பல கப்பல்கள் காத்திருப்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
அதற்கு சுனில் குமார் பலிவால் கூறியதாவது, இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னையை கண்காணிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு 24 மணி நேரமும் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு பகுதியில் பல் முனைய லாஜிஸ்டிக் பார்க் அமைக்க சென்னை துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சிப்காட் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரடுக்கு விரைவு மேம்பாலம்
அங்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் சாலை, ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும். தனியார் நிறுவனம் சார்பில் பல்முனை ஏற்றுமதிப் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு, சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட ஈரடுக்கு விரைவு மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தற்போது இத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றார்.
இதையும் படிங்க: சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிக்கு விரைவில் ஒப்பந்தம்