சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான தியாகராய நகர், பாண்டி பஜாரில் ரூ.39.86 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது. மேலும், ரூ. 19.11 கோடி மதிப்பில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டன.
- தி.நகர் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீட்டர்,
- தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரை 380 மீட்டர்,
- போக் சாலை முதல் அண்ணா சாலை வரை 564 மீட்டர்.
என மூன்று கட்டங்களாக நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபாதை வளாகங்கள் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணி அசைத்து இந்தத் திட்டத்தை திறந்து வைத்தார்.
இந்த சிறப்பு நடைபாதை வளாகத்தில் சாலையின் இருபுறமும் நடைபாதைகள் 10 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவது குறையும். இரு புறங்களிலும் மரங்கள், நடைபாதைகளில் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் இருப்பிட வசதிகள், முழு நேரமும் சுழற்சியில் இருக்கும் பேட்டரி வாகனங்கள் என்று முதியோரின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் சாலையில் நடப்பது போன்று உணர்வதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். வளாகத்துக்குள் மின்கம்பிகள், குழாய்கள் என்று அனைத்துமே புதைவழி தடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பைக் வசதி, இரு சக்கர வாகன நிறுத்த வசதி என்று இந்த வளாகம் அமைந்துள்ளது. இதை இவ்வாறே அரசாங்கமும் மக்களும் பராமரிக்க வேண்டும். அதுதான் இந்த திட்டத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக மக்கள் கருதுகின்றனர்.
இதையும் படிக்க: மாமல்லபுரமும் இரு நாட்டுத் தலைவர்களும் - புகைப்படத்தொகுப்பு 2