சென்னையில் சமீப காலமாக செல்போன் திருட்டு மற்றும் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில், கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் மூன்றுபேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, போலீஸார் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் மற்றும் IMEI தொழிற்நுட்ப முறையில் சம்பந்தபட்ட செல்போன் திருடர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், சி.பி.ராமசாமி சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மணிகண்டன் மற்றும் நவீன் என்ற நபர்களின் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்துள்ளனர். விசாரணையில் இருவரும் செல்போன்களைத் திருடி, சைனா பஜாரில் இருக்கும் இப்ராஹிம் என்பவரிடம் விற்று வருவது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கடை உரிமையாளரிடம் செய்த சோதனையில், 72 திருட்டு செல்போன்களும், 5 லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
மேலும், சைனா பஜாரில் கடை வைத்திருக்கும் இப்ராஹிம் செல்போன் திருட்டு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.