தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைவாகக் காணப்பட்டாலும், சென்னையில் மட்டும் அதிதீவிரமாக இருக்கிறது. அதன் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. சென்னையில் மட்டும் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 906ஆக உள்ளது.
இதனால் சென்னை முழுவதும் கரோனா பாதிக்கப்பட்ட சுமார் 202 தெருக்களை தனிமைப்படுத்தபட்ட பகுதிகளாக அறிவித்து, காவல் துறையினர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். அந்தத் தெருக்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு, தகுந்த இடைவெளி குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தவிர்க்கும் வகையில் காவல் துறை சார்பாக ரோபோ தாட்ஸ் என்ற நிறுவனம் ரோபோ இயந்திரம் ஒன்றை தயார் செய்துள்ளது.
கேமரா, ஒலிப்பெருக்கியை இணைத்து தயார் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோவை, காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்களுக்கு வெளியே நின்றே இயக்கலாம். வீட்டை விட்டு வெளியே வருபவர்களைக் கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருள்கள் தேவைப்பட்டால் பொதுமக்கள் உரையாடவும், ஒலிப்பெருக்கி மூலம் காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரத்யேகமான முறையில் இந்த ரோபா தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக தற்போது மயிலாப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மீனாம்பாள்புரத்தில் இணை ஆணையர் சுதாகர், மயிலாப்பூர் துணை ஆணையர் சேகர் தேஷ்முக் ஆகியோர் தலைமையில் ரோபாவின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. ரோபா இயந்திரத்தை மேம்படுத்திய பிறகு பல இடங்களில் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.